அரசே தடுப்பூசி விற்கும் அவலம்

மேற்கு வங்கத்தில், தேர்தலின்போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் திருணாமூல் காங்கிரஸ் தலைவி மமதா பேனர்ஜி. ஆனால், தான் ஜெயித்து வந்த பிறகு, தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அங்குள்ள தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு குறைந்தபட்சமாக ரூ. 800 வசூலிக்கின்றன. இந்நிலையில், அம்மாநில அரசு, மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதில்லை.

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 315 செலுத்தி, அந்த ரசீதை கொண்டு வந்து காட்டுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட அட்சியர்களுக்கும் இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் பணம் செலுத்துவதற்கான இரண்டு வங்கிக் கணக்கு விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சமீபத்தில், மமதா பேனர்ஜி, தொற்றுநோய்த் தடுப்பு குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார், அங்கு வந்திருந்த சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பை சேர்ந்த தொழிலதிபர்களை, மாநில அரசிடம் தடுப்பூசி வாங்கிக்கொள்ள நிர்பந்தித்துள்ளார். மேலும், தனியார் மருத்துவமனைகளை மாநில அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வாங்கிகொள்ள ஊக்குவித்தார். இதனால், திருணமூல் காங்கிரஸ் அரசு, தடுப்பூசிகளை விற்று குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க பார்ப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. முன்னதாக பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசும்கூட தடுப்பூசி மருந்தை தனியாருக்கு விற்று ஊழல் செய்த்து அனைவரும் அறிந்ததே.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு சலுகைகளைப் பெறும் நடுத்தர, ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்களை கட்டணம் செலுத்த அரசு கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், மேற்கு வங்க மக்கள் மட்டும் ஏன் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்?