பிரிவினைவாதத்தை விதைக்கும் ஷாஹி இமாம்

தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு சீட் வழங்குவதை சமீபத்தில் கண்டித்திருந்த ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் சித்திக்கி,“முஸ்லீம் பெண்களுக்கு தேர்தல் சீட்டு கொடுப்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், மதத்தை பலவீனப்படுத்துகிறார்கள். மசூதிக்கு செல்லும், நமாஸ் செய்யும் எந்த பெண்ணையாவது பார்த்திருக்கிறீர்களா? பெண்கள் வெளியில் வருவதை இஸ்லாத்தில் அனுமதித்திருந்தால் அவர்கள் மசூதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்காது. இஸ்லாத்தில் பெண்களுக்கு என்று ஒரு நிலை உண்டு” என கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், தியோபந்தின் மௌலானா ராவ் முஷாரப், ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் கருத்தை மறுத்துள்ளார். சித்திக்கியை விமர்சித்த மௌலானா முஷாரப், “இஸ்லாத்தில் பெண்கள் மசூதிக்கு செல்ல தடை எதுவுமில்லை. முன்பு பெண்கள் மசூதிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், ஆனால் மசூதியின் இமாம்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்வதால் முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். அவர்களது சீடர்கள் அவர்களை அடித்து துன்புறுத்து கற்பழிக்க முயன்றனர். மதகுருமார்கள் அவர்களை கற்பழிக்க முயன்றதால் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இஸ்லாம் பெண்களின் சமத்துவத்தை ஆணையிடுகிறது. பெண்கள் ஹஜ் செய்யச் செல்லும்போது எந்தத் தடையும் இல்லை. இஸ்லாம் ஆணைப்படி ஆண்களும் பெண்களும் ஹஜ் செய்ய செல்கிறார்கள். மசூதிக்கு செல்ல எந்த தடையும் இல்லை. பெண்கள் மசூதிக்கு செல்லக்கூடாது என்று குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் எழுதப்படவில்லை. பாரதத்துன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் பிரதமர்களாக பதவியேற்றுள்ளனர். பாரதத்தில் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். யாருக்கும் எந்த தடையும் இல்லை. அனைவரும் வாக்களிக்கலாம்,யாரும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. இந்த மௌலானாக்கள் அடிப்படைவாதத்தைப் பரப்புவதற்காகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இது பழமைவாதம் மற்றும் பிரிவினைவாதமாகும். இதுபோன்ற மௌலானாக்களின் அறிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதேபோல, சஹாரன்பூரின் இமாம் முப்தி காரி அர்ஷத் கவுராவும் இந்த அறிக்கைக்காக சித்திக்கியை விமர்சித்தார். “இஸ்லாத்தில் பல உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்களுக்கு வழங்கப்படவில்லை. பெண்கள் இதைச் செய்யக் கூடாது, பெண்கள் இதைச் செய்யக் கூடாது, ஷரியாவுக்கு எதிரானது என்று சிலர் கூறுவதை ஊடகங்களில் பார்க்கிறோம். தேர்தலின் போது இதுபோன்ற அறிக்கைகள் வெளிவருவதாகவும், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் கூறுவதாகவும் உணர்கிறேன். நமது நாடு ஜனநாயக நாடு. இது அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. அத்தகைய அறிக்கைகளை முன்னிலைப்படுத்தக்கூடாது என்று நான் நம்புகிறேன். ஷரீஅத்தில் உள்ள சட்டங்கள் பற்றிய தகவல்களை யாராவது பெற விரும்பினால், அவர்கள் இமாம்களின் அறிக்கைகளை நம்பக்கூடாது. தாருல் இஃப்தாவை அணுகி பதில்களை எழுத்துப்பூர்வமாகப் பெற வேண்டும்” என கூறினார்.