லயோலாவில் பாலியல் தொல்லை

சென்னை, லயோலா கல்லுாரியில், 2007 முதல் பணியாற்றி வந்த பேராசிரியை ஒருவருக்கு, அக்கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய அந்தோணி ராஜராஜன், பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து அந்த பேராசிரியை, கல்லுாரியில் உள்ள பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கமிட்டியில் புகார் அளித்துள்ளார். இக்கமிட்டி, 2013 ஏப்ரலில் தனது அறிக்கை அளித்தது. ஆனால், அந்தோணி ராஜராஜன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. கல்லுாரி முறையான நடவடிக்கை எடுக்காததால், பேராசிரியை காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து புகார் அளித்த பேராசிரியையை லயோலா கல்லுாரி நிர்வாகம் கல்லூரியில் இருந்து நீக்கியது. இதனையடுத்து அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அந்தோணி ராஜராஜனின் ஓய்வுத் தொகை, பணப் பலன்களை பேராசிரியைக்கு நிவாரணமாக வழங்க உத்தரவிட்டது. இவ்வழக்கில், தற்போது டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம், ‘பேராசிரியைக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி விட்டீர்களா, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும்’ என்று சென்னை லயோலா கல்லுாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.