உலகளாவிய முன்னணி கார்ப்பரேட் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான பெனிவிட்டி இன்க்., 2021ம் ஆண்டில் உலக அளவிலான தொண்டு நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியது. இதில் உலகளவில் சிறந்த 10 தொண்டு நிறுவனங்களின் வரிசையில், சேவா இன்டர்நேஷனல் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 2003ல் நிறுவப்பட்ட சேவா இன்டர்நேஷனல், உலக அளவில் மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவி செய்யும் லாப நோக்கற்ற சேவை அமைப்பாகும். இனம், நிறம், மதம், பாலினம், தேசியம் ஆகியவற்றைக் கடந்து மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் இந்த அமைப்பு உலகளவில் அறியப்படுகிறது. இது பாரதத்தில் 1989ல் தொடங்கப்பட்ட ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு வகையில் தொடர்ந்து சமூகப் பணியாற்றிவரும் சேவா இன்டர்நேனல், சமீபகால கொரோனா தாக்கத்தின்போதுகூட, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் வழங்குவது, தன்னார்வ தொண்டுப் பணிகள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் என எண்ணற்ற சமுதாயப் பணிகளை செய்து உலக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றால் அது மிகையல்ல. முன்னதாக, சேவா இன்டர்நேஷனல் 2020ல் 375வது இடத்திலும், 2019ல் 690வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.