செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் வருமானவரித்துறையை சேர்ந்த ஒரு பெண் அதிகாரி சோதனை நடத்த முயன்றபோது அவரிடம் அங்கு குழுமியிருந்த தி.மு.கவினர் அடையாள அட்டை காண்பிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் அதிகாரிக்கும் தி.மு.க ரௌடிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி.மு.கவினர் கார் கண்ணாடியை உடைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட தி.மு.வினர் அங்கே திரண்டதால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வருமான வரித் துறை சோதனை எனது சகோதரர் இல்லம், உறவினர்கள், நண்பர்கள் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களின் இல்லங்கள் என பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. எனது இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை. ஒருவேளை சோதனை நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். கரூரில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தபிறகு உடனடியாக நான் கரூருக்கு தொடர்பு கொண்டு கட்சி நிர்வாகிகள் யாரும் சோதனை நடைபெறும் இடங்களில் இருக்கக் கூடாது. சோதனையிட வந்தவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று சொன்னேன். உடனடியாக அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். வருமான வரித் துறையின் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகத்தான் இருக்கிறோம். சோதனை முழுவதும் நிறைவுபெற்ற பிறகு, என்னென்ன சோதனை நடைபெற்றுது, என்னென்ன கருத்துகளை அவர்கள் கூறினார்கள் என்பதை முழுவதுமாக அறிந்து பின்னர் நான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.

ஏற்கனவே, அ.தி.முக அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவருக்கு எதிராக வழக்கு உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கூட செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. தற்போது ஒவ்வொரு டாஸ்மாக் கடையில் இருந்தும் செந்தில் பாலாஜிக்கு மாதம் தோறும் ரூ. 60 ஆயிரம் கமிஷன் கொடுக்கப்பட வேண்டும் என்ற வீடியோக்களும் புகார்களும் இணையத்தில் உலா வருகின்றன. அதேபோல அவர் 300 கோடி ரூபாயில் அரண்மனை போன்ற பங்களா கட்டி வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.