அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று நேரில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாயை இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய லோகநாதன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார்.
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சார்பில், இவ்வழக்கு விசாரணையில் அரசுதரப்புக்கு உதவியாக எங்களையும் இவ்வழக்கில் அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது மனு மீதான உத்தரவு அக்.3-ம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தரப்பில் வழக்கறிஞர்கள் சீனுவாசன், ராதிகா செந்தில் ஆகியோர் ஆஜராயினர். பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இயற்கை வளத்தை சூறையாடுபவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். குற்றம் செய்தவர் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டும் என்றுதான் இவ்வழக்கில் என்னை இணைத்துக் கொண்டேன். இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என்றார்.