தி.மு.கவினரின் செலக்டிவ் அம்னீஷியா

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 18ம் தேதி அன்று, ‘தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20க்கு, உற்பத்தி விலையை விட 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது’ குற்றச்சாட்டை வைத்தார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரத்தை கேட்க, அண்ணாமலை, மின்துறையில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கட்டணத்தை வழங்க கமிஷன் பெறப்பட்டதாக அதற்கான வங்கி பரிவர்த்தனை விவரங்களை வெளியிட்டார். மேலும், செந்தில் பாலாஜி அ.தி.மு.கவில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலின் மிக கடுமையாக குற்றம்சாட்டி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.

இதற்கு, அண்ணாமலை அளித்த எக்ஸெல் ஷீட் எல்லாம் ஒரு ஆதாரமா என கேட்டுள்ளார் செந்தில் பாலாஜி. ஆனால், அவர் ஒன்றை மறந்துவிட்டார். சேகர் ரெட்டியின் டைரியில் பெயர் இருந்தது என வெளியான செய்திகளின் அடிப்படையில் அதில் இடம்பெற்றவர்கள் அனைவரையும் பதவி விலகச் சொல்லி அறிக்கை வெளியிட்டார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். டைரியில் பெயர் இருப்பதெல்லாம் ஒரு ஆதரமா என அன்று யாரும் கேட்கவில்லை. மாறாக பல சார்பு ஊடகங்களும் இதனை வைத்து பல நாட்களாக காரசார விவாதங்கள் நடத்தின.

இதேபோல, தனியார் ஊடகம் ஒன்று, ரபேல் ஊழல் நடைபெற்றதாகக் கூறி ஒரு ஜெராக்ஸ் பேப்பரை எவ்வித ஆதாரமும் இன்றி வெளியிட, அதனை சாக்காக வைத்து காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தின. வழக்கம்போல, சார்பு ஊடகங்கள் இதற்கும் விவாதங்கள் நடத்தின. அப்போதும் ஜெராக்ஸ் பேப்பர் எல்லாம் ஒரு ஆதாரமா என யாரும் கேட்கவே இல்லை. ஆனால், தங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே இப்படி புத்திசாலித்தனமாக கேட்கின்றனர் இவர்கள். ஊடகங்களும் இதுபோன்ற விஷயங்களில் ‘செலக்டிவ் அம்னீஷியா’ என்ற ஞாபகமறதி நோய்க்கு ஆட்பட்டுவிடுகின்றன.