ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆலோசகரான எம்.எல்.ஏ பங்கஜ் மிஸ்ராவுக்கு சொந்தமான ரூ. 30 கோடி மதிப்புள்ள கப்பலை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஜார்கண்டின் சாஹிப்கஞ்சில் உள்ள சுகர்கர் காட் பகுதியில் இருந்து தாஹு யாதவ், பங்கஜ் மிஸ்ரா மற்றும் பிறர் இணைந்து சட்டவிரோதமாக வெட்டியெடுத்த கற்கள், கற்பாறைகள் போன்ரவற்றை கொண்டுசெல்ல அந்த கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட இரண்டு கல் உடைக்கும் இயந்திரங்கள், ஐந்து கல் நொறுக்கும் இயந்திரங்கள், மூன்று லாரிகள், ஐந்து சட்டவிரோத கைத்துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்டவை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக இந்த சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பகுதி 37.5 மில்லியன் கன அடியாக இருக்கும் எனவும் அதன் மதிப்பு சுமார் ர்ரு. 45 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதைத்தவிர, மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுடன் தொடர்புடைய ரூ. 100 கோடிக்கும் அதிகமான தடயங்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.