அவசர சட்டம் பாதுகாப்புத் துறைக்கு பாதுகாப்பு

பாரதத்தின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் அவற்றையொட்டிய கடல் பகுதிகளிலும் சீனாவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பாரத நாட்டின் எல்லையோர ஆட்சிப்பகுதியான லத்தாக்கில் சீனா போர்ச்சூழலை உருவாக்கி வருகிறது.

இதைத் தொடர்ந்து, பாரத நாட்டின் பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறையின் தொழிற்சாலைகளிலும் பிற பாதுகாப்பு நிறுவனங்களிலும் வேலைநிறுத்தத்தை தடைசெய்யும் நோக்கில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டத்தை (ஈ.எஸ்.டி.ஓ- 2021) மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஓராண்டு சிறை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கத் தூண்டுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது ரூ.15,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு எதிராக, கடுமையான கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஏகமனதாக நிறைவேற்றி, அவசர சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி வருகின்றனர். நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உபகரணங்களை தயாரிக்கும் ஆவடி டேங்க் தொழிற்சாலை உட்பட 41 அரசு தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

படைத்துறையினருக்கான ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக மாறுவது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து இல்லையா? என்பது தொழிற்சங்கத்தினரின் வாதம். இதைப் படிக்கும்போது நமக்கும் கூட ஆமாம் என்றுதான் தோன்றலாம். கடந்த 2018ல் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி கண்காட்சி நடைபெற்றது நமக்குத் தெரியும்.

அந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பீரங்கிகள், துப்பாக்கிகள், புல்லட் ப்ரூப் உடைகள், போர் விமானங்கள், போர் கப்பல்கள், இலகுரக விமானங்கள் போன்ற ராணுவ தளவாடங்களை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்பவைதான். பாரதத்துக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள சிறிய, வளரும் நாடுகள் அனைத்துக்கும் தேவையான ராணுவ தளவாடங்களை அந்த பெருநிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன.

இப்படி அந்நிய நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்யும் நிலையை மாற்றி, அந்த அந்நிய நாட்டு நிறுவனங்கள் பாரதத்திலேயே அந்தத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்கினால் இங்கு தொழிற்சாலைகள் புதிதாக உருவாகும். அந்தத் தொழிற்சாலைகளை சார்ந்து சிறு தொழில் நிறுவனங்களும் அதிகமாகும்.

வளரும் நாடுகளுக்கு அதிக மக்கள்தொகையும் வேலையின்மையும் ஒரு பெரும் சவாலாக அமைகின்றன. தொழில்மயமாதல், நாட்டின் உற்பத்தி வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுகிறது. இதனால் மக்களின் வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் மேம்படும். உலக நாடுகளுக்கு அந்த தனியார் நிறுவனங் கள் ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் அந்நிய செலாவணி நமக்கு அதிகமாக கிடைக்கும். சரி, அதை அரசுத்துறை தொழிற்சாலையாகவே செய்யலாமே? எதற்கு பொதுத்துறையாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

பொதுத்துறை நிறுவனம் என்பது வணிக ரீதியாக உற்பத்தி மேற்கொள்ள தேவையான தனியார் முதலீடுகளை ஏற்க முடியாத சூழலில் அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்கவும், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் உருவாக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களின் உற்பத்தியில் குறைந்தபட்சம் 30 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கொள்கை உருவாக்கப்பட்டது.

நமது நாட்டில் சுரங்கங்கள், உருக்காலைகள், நவீன இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை பொதுத்துறை நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சேலத்தில் செய்ல், திருச்சியில் பெல் போன்றவை பொதுத்துறை நிறுவனங்கள்.

தனியார் நிறுவனங்கள் பாரத சந்தையில் நுழைந்ததன் காரணமாக ஊட்டியில் இயங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை நலிவுற்றது. டைடன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பாரதத்தில் உற்பத்தியைத் துவக்கியதால் எச்எம்டி வாட்ச் ஃபேக்டரி நலிவுற்ற நிலைக்கு வந்தது. காலத்தின் தேவையை உணர்ந்து செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை தடுக்க இயலாது. இப்படி மூடுவதால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இந்தச் சூழலில் அரசுத்துறையை பொதுத்துறையாக மாற்றாதே என்ற கோரிக்கையும் ஆராய்வோம். பொதுத்துறை நிறுவனம் என்றால் ஒவ்வோராண்டும் வரவு, செலவை பொது வெளியில் தெரிவிக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் நஷ்டங்களைச் சரிசெய்ய அரசின் நிதி ஆதாரங்களிலிருந்து பணம் தரப்படுகிறது. ஆனால், எவ்வளவுநாளைக்கு எவ்வளவு கோடிகள் வரை செலவு செய்தால் என்ன மறுசீரமைப்பு செய்தால் இந்த நிறுவனத்தை லாப நோக்கத்தில் இல்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை வீணாக்காமல் தொடர்ந்து நடத்த முடியும் என அரசு நடவடிக்கை எடுக்க முயலும்.

எடுத்துக்காட்டாக சென்னையிலுள்ள உரம் தயாரிக்கும் எம்.எஃப்.எல். தொழிற்சாலை விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தயாரிப்பதால் நஷ்டம் ஏற்பட்டாலும், விவசாயிகளின் நலன் கருதி அரசு நிதி அளிக்கிறது. அதாவது எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமோ அதற்கான சரியான காரணத்தை அரசு புரிந்து கொண்டு மக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஆனால் ரயில்வே, தபால், ராணுவம் போன்ற அரசுத்துறைகளில் மக்கள் சேவை என்ற பெயரில் செய்யப்படும் செலவுகள் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்வது அவ்வளவு சுலப மல்ல. இந்த வகையில் அரசு செய்யும் செலவுகள் மக்களின் கவனத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றன. சென்னையில் உள்ள ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை நாட்டின் முதல் தொழிற்சாலையாகும்.

உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ள இந்தத் தொழிற்சாலைக்கு 700-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அனுபவமும் உண்டு. இருப்பினும், சென்னை மெட்ரோ நிறுவனத்துக்குத் தேவையான ரயில் பெட்டிகளைவிநியோகிக்க விடப்பட்ட உலகளாவிய ஏலத்தில் பங்கேற்கும் தகுதி சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலைகளுக்கு இல்லை. அதற்குக் கூறப்பட்ட காரணம், அது பொதுத்துறை நிறுவனமாக இல்லை என்பதே.

அதாவது ரயில்வே துறையைச் சேர்ந்த ரைட்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் சென்னை மெட்ரோ ஒப்பந்த ஏலத்தில் பங்கேற்கலாம். ஆனால் அரசுத்துறை நிறுவனமான ரயில் பெட்டி தொழிற்சாலை கலந்துகொள்ள இயலாது. நவீன தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தி உற்பத்தியாகும் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு அரசுத்துறை நிறுவனமாக இருந்தால் சாத்தியமில்லை. அதனையே பொதுத்துறை நிறுவனமாக மாற்றினால் சாத்தியம் என்பதை இந்த உதாரணம் நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய சூழலில் மத்திய, மாநில அரசுகள் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த முறையில்தான் செயல்படுத்தி வருகின்றன. அரசுத் துறைகளில் மட்டும் நாளுக்கு நாள் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. ராணுவ படைத்துறை தொழிற்சாலைகளில் நிரந்தரப் பணியாளர்களில் எண்ணிக்கையையும் அங்கு உற்பத்தியாகும் பொருட்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது தனியார் ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்புத் துறையில் பல்வேறு விதங்களில் பங்களித்து வருகின்றனர் என்பது புரியும்.

ஏர் இந்தியா நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதால் அந்த பொதுத்துறையை தனியாருக்கு விற்க மத்திய அரசு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்போது பணியில் உள்ள பணியாளர்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்கு அனுப்பக் கூடாது என்ற நிபந்தனை காரணமாகவே எந்த ஒரு தனியார் நிறுவனமும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு தயாராக இல்லை.

மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்காது என்பதையும் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு முன் தேசத்தின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
-K.N.சாமி