பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள பாதுகாப்பு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன.பாரதத்தில் வேறெங்கும் இந்த தொழில்நுட்ப படிப்புகள் இல்லை. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இத்துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான புதிய எம்.டெக் படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்துடன் இணைந்து பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) அறிமுகப்படுத்தியுள்ளது.

போர் வாகன தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், போர்க்கப்பல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் உணரிகள், அதிசக்தி பொருட்கள் தொழில்நுட்பம், லேசர், மைக்ரோவேவ் சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகிய 6 பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஐ.ஐ.டி, என்.ஐ.டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் போன்றவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அனுமதியுடன் வழங்கப்படும் இந்த படிப்புகளை நேரடியாகவோ அல்லது இணைய வழியிலோ வழங்கலாம். இதில் சேரும் மாணவர்கள், தங்களுடைய பட்டமேற்படிப்பு ஆராய்ச்சியை மேற்கொள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்களிலும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.