நீதிபதிகளுக்கு பாதுகாப்பு

ஹிஜாப் அணிவது முஸ்லிம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. அது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின் கீழ் வரவில்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் கர்நாடகாவில் உமாபதி என்ற வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் மூலம் வந்த வீடியோ ஒன்றில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (டி.என்.டி.ஜே) தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லா போன்றோரும் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். இது தொடர்பாக கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ‘ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.