மக்கள் வரிப்பணத்தில் மதவாத அரசியல்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்கள் கிறித்தவ சர்ச், ஜெபக்கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்க வேண்டுகோளை பத்திரிகை அறிக்கையாக அளித்து வருகின்றனர். இந்த ஆண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பத்திரிகையில் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர். மதசார்பற்ற அரசு மக்களின் வரி பணத்தை, மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது. தமிழக அரசு, ஹிந்துக் கோயில்களை அரசு தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைத்து வருகிறது. பல்லாயிரம் கோயில்களில் லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் ஒரு கால பூஜைகூட இல்லாத நிலை இருக்கிறது. பலநூறு கோயில்கள் சீரழிந்து கிடக்கின்றன. தி.மு.க, தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் கோயில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. கிறித்தவ சர்ச்களுக்கு வாரி கொடுக்கும் தமிழக அரசுக்கு சில கேள்விகளை இந்து முன்னணி முன் வைக்கிறது. கிறித்தவ சர்ச்கள் ஒவ்வொரு கிறித்துவரிடமும் தசம பாகம் வசூல் செய்கிறது. அதாவது கிறித்தவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு பாகம் சர்ச்க்கு செலுத்தியே ஆக வேண்டும். அது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் சர்ச் வளர்ச்சிக்கும் கிறித்துவ மதத்தை பரப்ப பல்லாயிரம் கோடி நிதி வெளிநாடுகளிலிருந்து வருகிறது. அதுவும் கிறித்தவ சர்சுகளுக்குள் அடக்கம். இப்படி இருக்கையில் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை சிறுபான்மையினர் நலத்திற்கு என தருவது அநாவசியமானது. மேலும் தமிழக அரசு நிதி தருவதால் கிறித்தவ சர்ச்சுகள், ஜெப கூடங்கள் கொள்ளை நோய் போல தமிழகத்தில் பல்கி பெருகி மதமாற்றம் எனும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறித்தவ ஓட்டு வங்கி தான். கன்னியாகுமரி பாதிரியார் ஜான் பொன்னையா, தமிழக தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது கிறித்தவர்கள் போட்ட பிச்சை என பகிரங்கமாக கூறினார். இதனை சுயமரியாதை பேசும் எந்த தி.மு.க தலைவரும் கண்டிக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சி வந்த பிறகு கிறித்தவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. ஒரு மதத்தினருக்காக மக்கள் வரி பணம் செலவிடப்படுவதை முஸ்லிம் ஹஜ் பயணம் செய்ய தந்துவந்த மானியம் வழங்குவதை கண்டித்து தீர்ப்பு வழங்கிய போது உச்சநீதி மன்றம் கூறியது. அதே கருத்து சர்ச் புனரமைப்பிற்கு நிதி அளிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும். சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும். இல்லையேல் சட்டத்தின் துணை கொண்டு நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காண நேரிடும் என்பதை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.