கடலுார் மாவட்டம், வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில் செயல்படும் அமலா சிறுவர் சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் பள்ளியில், ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கி படிக்கின்றனர். சமீபத்தில் இங்கிருந்த சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் ஜேசுதாஸ்ராஜா ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால், காப்பகத்தில் இருந்த 40 சிறுமியர் மீட்கப்பட்டு கடலுார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய குழந்தைகள் நல ஆணைய பதிவாளர் அனு சௌத்ரி தலைமையிலான உறுப்பினர்கள் இந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அமலா மெட்ரிக் பள்ளி மற்றும் காப்பகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆய்வுக்குப் பிறகு காப்பகத்திற்கு சீல் வைக்கப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.