ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை, சபரீஷ் எழுதிய, கருட பிரகாஷன் நிறுவனம் பதிப்பித்த ‘இந்தியாவில் அறிவியல் பற்றிய சுருக்கமான வரலாறு’ என்ற ஆங்கில புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், ‘பாரதம் ஒரு பரந்த அறிவு அமைப்பைக் கொண்டுள்ளது. அது எப்போதுமே ஒரு தொழில்முனைவோர் சமுதாயமாக உள்ளது. விவசாயம் அதன் ஒரு முக்கிய அங்கம். பாரதம் இன்னும் ஆய்வு செய்யப்பட காத்திருக்கும் ஒரு பரந்த அறிவு அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் அறிவு அமைப்பின் பரந்த தன்மையை மக்கள் அறிய வேண்டும். அதனை உறுதி செய்வது இளம் சிந்தனையாளர்கள், அறிஞர்களின் கடமை. உலகில் நிலவும் ஒரு சில தவறான கருத்துகளுக்கு மாறாக, பாரதம் என்றுமே ஒரு அறிவியல் சமூகம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது அன்றாட வாழ்வில் அறிவியல் கலந்துள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான பாரத மக்களின் அறிவியலைப் பற்றிய புரிதல் சிறப்பானது’ என்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “ஒரு மனிதனாக, மறைந்துள்ள மற்றும் தெரியாதவற்றை கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நாம் தொடர்ந்து கண்டுபிடிப்பது நமது விஞ்ஞான சாதனை மற்றும் வெற்றியின் ஒரு பகுதியாக மாறும்” என கூறினார்.