புதிய கல்வி கொள்கை மாணவ மாணவிகளின் கற்பனைத் திறன், சிந்தனைத் திறன், கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு, தொழில் முனைவோராக மாற்ற உதவும். இதில் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, ஏ.ஐ.சி.டி.இ மற்றும் சி.பி.எஸ்.இ. கல்வி அமைச்சகம் ‘பள்ளி புதுமைத் தூதர் திட்டம்’ என்ற ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இதில் மாணவ மாணவியருக்கு வழிகாட்டும் ஆசிரியரின் பங்கு மிகவும் இன்றியமையாதது என்பதால், ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சியை கல்வி அமைச்கம் வழங்குகிறது. புதுமை தூதர்களான ஆசிரியர்கள், தனது பள்ளியில் புதுமை கலாச்சாரத்தை உருவாக்க உதவுவது, தனது பள்ளி மட்டுமல்லாமல் அருகிலுள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், தேசிய அளவில் நடத்தப்படும் புதுமை போட்டிகளுக்கான மதிப்பீட்டாளராக செயல்படுவது என பல விதங்களில் செயல்படலாம்.
இதில் கலந்துகொள்ள, சிக்கல் தீர்க்கும் திறன், நல்ல தொடர்புத் திறன், பகுப்பாய்வுத் திறன், புதிய யோசனைகளை வளர்ப்பதில் ஆர்வம், மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட ஐந்து ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகள் https://mic.gov.in/sia என்ற இணையதளம் மூலம் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.