பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சவுதி அரேபிய இளவரசர் சல்மான் டெல்லியில் சந்தித்துப் பேசினார். ஜி-20 உச்சி மாநாடு கடந்த 9, 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜி-20 உறுப்பு நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மான் பங்கேற்றார். அவருடன் 7 அமைச்சர்கள், 100 தொழிலதிபர்கள் டெல்லிக்கு வந்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இளவரசர் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்திய, சவுதி அரேபிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது இந்திய-–சவுதி அரேபிய கவுன்சில் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் கவுன்சில் வலுப்படுத்தப்பட்டது. இப்போது கவுன்சிலின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்திய-–சவுதி அரேபிய கவுன்சில் மூலம் இரு நாடுகள் இடையே அனைத்து துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். இரு நாடுகளும் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்டுவதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன. இந்தியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகள் இடையே புதிய வழித்தடத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தில் சவுதி அரேபியாவும் இணைந்துள்ளது. இந்தியா, சவுதி அரேபியா இடையிலான உறவின் மூலம் சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை ஏற்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சவுதி இளவரசர் சல்மான் பேசும்போது, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே உறவு நீடிக்கிறது. இந்தியா எங்களின் நட்பு நாடு. கடந்த 70 ஆண்டுகளாக சவுதி அரேபியாவை கட்டி எழுப்ப இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. இதேபோல இந்தியாவின் வளர்ச்சியிலும் சவுதி முக்கிய பங்காற்றி இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான உறவில் எந்த சூழலிலும் பிரச்சினைகள் எழுந்தது கிடையாது. சவுதியின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

இந்திய, சவுதி அரேபிய முதலீட்டாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் முதலீட்டு துறை அமைச்சர் பதார் அல் பதார் கூறும்போது, “இந்தியா, சவுதி இடையே 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன’’ என்று தெரிவித்தார்.