கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து பல்வேரு நாடுகள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. அவ்வகையில், சௌதி அரேபியாவும் அதேபோல அறிவித்துள்ளது. ஆனால், சீன தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சௌதி தடை விதித்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் இரண்டு சீன தடுப்பூசிகளும் அங்கீகரித்த போதிலும், சில வளைகுடா நாடுகள் இந்த சீன தடுப்பூசிகளை அங்கீகரிக்கவில்லை. இது குறிப்பாக பாகிஸ்தானுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அதன் குடிமக்களில் பெரும்பாலோர் சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளைத்தான் செலுத்திக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் திட்டமிடல், மேம்பாட்டுத்துறை அமைச்சர் அசாத் உமர், ஹஜ், வேலை அல்லது கல்விக்காக சௌதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டிய பாகிஸ்தானியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் ஃபைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். சீன தடுப்பூசி சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாதது உலகளாவிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். மலேஷிய அரசும் இதே பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.