காஷ்மீருக்குத் திரும்பிய சாரதாதேவி

நேற்றைய தினம் யுகாதி திருநாள் என்பது மட்டும் விஷேஷம் அல்ல. காஷ்மீர் மாதா என அழைக்கப்படும் சாரதா தேவியின் விக்ரகம் புதிதாக கட்டப்பட்ட சாரதா தேவி கோயிலுக்குத் திரும்பியதால் நேற்று ஒரு நாகரீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. ஒரு முன்னோடி சாதனையாக, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே புதிய சாரதா தேவி கோயில் நேற்று (மார்ச் 22) திறக்கப்பட்டது. இதற்காக, சாரதா தேவியின் பஞ்சலோக விக்கிரகம் காஷ்மீரில் உள்ள டீட்வாலை அடைந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சாரதாதேவி மீண்டும் திரும்புவதைக் குறிக்கிறது. சைத்ர மாதத்தின் முதல் நவராத்திரி விழாவையொட்டி, புதிதாக கட்டப்பட்ட கோயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சிருங்கேரி மடத்தால் ஆதரிக்கப்படும் இந்த கோயில், பாரம்பரிய காஷ்மீரி கட்டடக்கலை பாணியை பிரதிபலிக்கிறது. அருகில் பாயும் கிஷங்கங்கா கரையில் கட்டப்பட்ட ஒரு படித்துறையுடன் (காட்) கூடியதாக இக்கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. பித்ரு பூஜையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் காட், முறையான படிகளுடன் இது கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீர் சேவ் சாரதா கமிட்டியின் முயற்சியால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. காஷ்மீர் சேவ் சாரதா கமிட்டி புராதன சாரதா கோவிலை புதுப்பிக்க அமைக்கப்பட்டது.

இந்த இடம், பண்டைய பாரதத்தில் கல்வி கற்கும் முக்கிய இடமாக இருந்தது, ஆனால் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 1947-48 பாகிஸ்தான் போர் உட்பட பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு இடிந்து கிடக்கிறது. சேவ் சாரதா கமிட்டி நிறுவனர் ரவீந்தர் பண்டிதா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) சாரதா யாத்திரையை கிஷங்கங்கா ஆற்றின் குறுக்கே மீண்டும் திறக்க நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது முயற்சிகள் பல தொடக்கங்களையும் நிறுத்தங்களையும் கண்டுள்ளது. இந்த சூழலில், 2022ம் ஆண்டில், அவரது சேவ் சாரதா கமிட்டியால் தொடங்கப்பட்ட முயற்சிக்கு சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் மற்றும் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் ஆசீர்வதித்தபோது ஒரு தீர்க்கமான தருணம் வந்தது.

பழைய நாட்களில் யாத்திரையின் அடிவாரம் இருந்த டீட்வால், அன்னை சாரதாவிற்கு ஒரு புதிய கோயிலை கட்டவும் அதில் அன்னையை பிரதிஷ்டை செய்வதற்குமான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் இதற்காக ஆசீர்வதித்தார். மேலும் சிருங்கேரி மடம், டீட்வாலில் கோயில் கட்டும் உன்னத முயற்சிக்கு தனது முழு ஆதரவையும் அறிவித்தது. கோயிலில் சாரதா தேவியின் புதிய பஞ்சலோக விக்ரகத்தை நிறுவுவதற்கும் முயற்சி எடுத்தது. இந்த பஞ்சலோக விக்ரகம், ஜனவரியில் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு டீட்வாலில் புதிதாக கட்டப்பட்ட சாரதா கோயிலுக்கு சுமார் 3,000 கி.மீ தூரம் யாத்திரை தொடங்கியது. பெங்களூரு, மும்பை, புனே, அகமதாபாத், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராம், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வழியாக யாத்திரை சென்றது. யாத்திரை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை (மார்ச் 20) டீட்வாலை அடைந்தது.

இதனையடுத்து கோயில் நேற்று முறைப்படி திறக்கப்பட்டது. ஆனால் பிரான பிரதிஷ்டை விழா, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசன்னிதானத்தால் மே மாதத்தில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கோயிலுடன், சாரதா சர்வஜ்ன பீடத்தில் கடைசியாக அமர்ந்திருந்த பல பெரிய காஷ்மீரி துறவிகளில் ஒருவரான ஸ்வாமி நந்த்லால் ஜியின் விக்கிரகத்தை வைப்பதற்காக ஒரு சிறிய சன்னதியும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் திட்டங்கள் பூஜைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, இது காஷ்மீரி ஹிந்து சமூகத்தின் நாகரீக மரபு மற்றும் அதன் நீண்ட ஞான பரம்பரையை புதுப்பிக்கும் ஒரு புள்ளியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரி ஹிந்து சமூகத்திற்கு மார்தண்ட், அமர்நாத் தவிர முக்கியமான மூன்று தீர்த்தங்களில் சாரதா பீடமும் ஒன்றாக இருப்பதால் இந்த செயல்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் இன்று வெளியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.