நதிகளை வழிபடுவதே சனாதனம்

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழாவை நடத்தியது. நேற்று முதல் ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் உரையாற்றிய ஆளுநர், “நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து விதமான உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். பாரதத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களும் நதியை வழிபடுகிறார்கள்; இதுதான் சனாதனம். பூமியை ஒரு ஆதாரமாக மட்டுமே பார்க்க கூடாது; அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நான் நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் நாம் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில், அரசன் குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்ரித் சரோவர்’ திட்டத்தை பிரதமர் செய்யல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட்டுக்குள் 50 ஆயிரம் குளங்களை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து வரும் 25 ஆண்டுகள் நமக்கு மிக முக்கியமானவை. 2047ல் உலக நாடுகளுக்கு நமது நாடு தலைமையாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.