உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து

உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே. அது தாக்குதலுக்கு உள்ளானால் மனித குலத்துக்கே நெருக்கடி ஏற்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கோரக்பூர் கோரக்நாத் கோயிலில் ஏழு நாள் நடைபெற்ற மத் பகவத் கதா ஞான யாகத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த உலகில் ஒரேயொரு மதம் மட்டுமே உள்ளது. அதுவே சனாதன தர்மம். மற்ற அனைத்துப் பிரிவுகளும் கடவுளின் வழிபாட்டு முறைகள் மட்டுமே. மனித குலத்தின் ஒரே மதமான சனாதனம் தாக்கப்பட்டால் அது உலகம் முழுவதிலும் இருக்கும் மனிதகுலத்திற்கான நெருக்கடி யாகவே அமையும். பகவத் கீதையின் கதை எல்லையற்றது. அதனை குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாது. எல்லையின்றி பாயும் அதன் சாராம்சத்தை பக்தர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

மஹந்த் திக்விஜய் நாத்தின் 54-வது நினைவு தினம் மற்றும் தேசிய துறவி மஹந்த் அவைத்யநாத்தின் 9-வது நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு கோரக்நாத் கோயிலில் ஏழு நாட்கள் இந்த நிகழ்வு நடை பெற்றது. சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி தரும் விதமாகவே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.