சாகர்மாலா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 5.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 6.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதாக தேசிய சாகர்மாலா தலைமை குழு முடிவுசெய்துள்ளது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் கோடி ரூபாய்க்கு 802 பணிகள் நடைபெற்று வந்தன. புதிதாகக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பணிகளின் எண்ணிக்கை 1,537 ஆக உயர்ந்துள்ளது. 2035க்குள் இப்பணிகளை நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரதத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் அவற்றுக்கான போக்குவரத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே சாகர்மாலா திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தால், நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும். சாகர்மாலா திட்டப் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 99,281 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன. 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அரசு, தனியார் கூட்டணியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 பணிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் இவை முடிந்துவிடும். சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரதத்தின் முக்கிய துறைமுகங்களின் போக்குவரத்து 6.94 சதவீதம் அதிகரித்துள்ளது. என்றபோதிலும், துறைமுகங்களிலிருந்து சரக்கை வெளியில் அனுப்பும் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களில் சரக்குகளைக் கையாள மேலும் அதிகமான டெர்மினில்கள், பெர்த்துக்களை அமைக்கும்போது இந்த காத்திருப்பு நேரம் இன்னும் குறையும். என மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.