தமிழக பா.ஜ.க சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் 332 வார்டு உறுப்பினர்கள்; 41 பஞ்சாயத்து தலைவர்கள், 8 ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 381 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘பா.ஜ.க பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை எந்த அறிவிப்பும் இல்லாமல் காவல்துறை நள்ளிரவில் கைது செய்துள்ளது. இது குறித்து கேட்ட மகளிரணி நிர்வாகியையும் காவலர்கள் அவமரியாதையாக நடத்தியுள்ளனர். பா.ஜ.க மீதும், பிரதமர் மீதும் மோசமான விமர்சனங்கள் செய்வோருக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்தில் சர்வாதிகாரம் தலைதுாக்கி இருப்பதற்கு இதுவே உதாரணம். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும், ஆளும்கட்சியின் ஏவல்துறையாக செயல்படக்கூடாது. தி.மு.கவினர், நெருக்கடி நிலை என்று கூறி, ஒரு யூனிட் மின்சாரத்தை, ரூ. 20க்கு வாங்குகின்றனர். இது, உற்பத்தி செலவை விட 4 மடங்கு அதிகம். ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் உற்பத்தி நிலையம் மூலமாக ரூ. 5,000 கோடிக்கு மின்சாரத்தை விற்க மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார். ஆளும்கட்சியினர் சம்பாதிப்பதற்காகவே இது செய்யப்படுகிறது. இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஒப்பந்த பேச்சு குறித்த ஆவணங்களை பா.ஜ.க வெளியிடும்’ கூறினார்.