தேசிய குற்ற ஆவண காப்பகம், 2021-ம் ஆண்டு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டும் நடைபெற்றுள்ளது. இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், உ.பி.யில் மதக் கலவரம் இல்லை என்ற நிலையாக உள்ளது. மதக் கலவரங்கள் மீதான அறிக்கையில், மகராஷ்டிராவில் மிக அதிகமாக 378 நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 77, பிஹார் 51, ஹரியானா 40 என உள்ளன. இதற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத், காவல் துறை அதிகாரிகளிடம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து உ.பி.யின் ஏடிஜிபியான பிரஷாந்த் குமார் கூறும்போது, ‘மகளிருக்கு எதிரான குற்றங்கள், கொலை, ஆள்கடத்தல் குற்றங்களும் குறைந்துள்ளன. இதில் 16 ஆவது இடத்திலிருந்து 28வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் குற்றங்களும் குறைந்து, உ.பி 21வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார். பா.ஜ.க ஆளும் உ.பி.யில் முதல்வராக யோகி ஆதித்தியநாத் பொறுப்பேற்றது முதல் காவல் துறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் போன்று அவர்களின் கைகள் கட்டப்படவில்லை. ஆளும் கட்சியோ எதிர் கட்சியோ தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுகின்றனர். புதிதாக 53,586 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உ.பி. காவல் துறையால் ரூ.129.4 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.