திருநெல்வேலி மாவட்டம் நெல்லைதிருத்து பகுதியைச் சேர்ந்தவர் எம்.எஸ்.முருகன். மானூர் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக இருந்த அவர், ஆன்மிகம் மற்றும் தேசப் பணிகள் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வந்தார். முருகனுக்கு, சில சமூக விரோதிகளால் தொடர்ந்து இடையூறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், கடந்த மே மாதம் 23ம் தேதி மானூர் ஒன்றியம் களக்குடி – மானூர் சாலையில் முகத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் முருகன் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, முருகனின் குடும்பத்தினர், உறவினர்கள், ஆர்.எஸ்.எஸ், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.கவினர், பொதுமக்கள் என பலர் மருத்துவமனையில் குவிந்தனர். முருகனின் மர்ம மரணம் குறித்து உடனடியாக விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம்: முருகனின் மர்ம மரணத்தில் சில சந்தேகங்களை அப்பகுதி மக்கள் எழுப்பியுள்ளனர். உதாரணமாக, களக்குடி மானூர் சாலை, 20 அடி அகலம் உடைய நீளமான எந்தவித வளைவுகளும் இல்லாத பகுதி. அதில், ஒருவர் கீழே விழும் அளவிற்கு எந்த தடுப்புகளும் இல்லை எனும்போது, முருகன் எப்படி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கும்? சாலையிலிருந்து 5 மீட்டர் தள்ளி முருகனின் உடல் இருந்துள்ளது அவருடைய இருசக்கர வாகனம் சாலையில் 10 மீட்டர் தள்ளி இருந்தது. முருகன் இயல்பாகவே வேகமாக வண்டியை ஓட்டும் நபர் அல்ல; எனினும், வாகனங்களின் பாகங்கள் வெவ்வேறு பகுதிகளிலும் உடல் வேறு பகுதியிலும் எப்படி இருந்தது? தலைக்கவசம் அணிந்திருந்தும் முகம், தாடை பகுதிகளில் பலமான காயம் ஏற்பட்டு உயிர் பிரியும் அளவிற்கு ரத்தப்போக்கு எப்படி ஏற்பட்டது? முருகனின் உடலில் நெற்றி பகுதியில் அடித்தது போன்ற பலமான காயங்கள் உள்ளன; ஆனால் தலைக்கவசத்தின் நெற்றிப் பகுதி சேதம் ஏற்படவில்லை. முருகனின் உடலில் இடது மார்பு பகுதியில் சட்டை கிழிந்து பலத்த அடிபட்டதற்கான அறிகுறிகளும் தெரிகிறது. இப்படி மேலும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் இது, வேண்டுமென்றே விபத்தை போன்ற தோற்றம் ஏற்படுத்தும் ஒரு கொலை முயற்சியோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை: முருகனின் அண்ணன் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி எஸ்.பி. மற்றும் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தனது தம்பி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பொறுப்பில் இருந்ததால், பயங்கரவாதிகளால் அவரது மரணம் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, அவரது பிரேதப் பரிசோதனை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இவ்வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும். முருகனின் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.