ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அகில பாரத பிரதிநிதி சபா மார்ச் 11 முதல் 13 வரை குஜராத் தலைநகர் கர்ணாவதியில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், தேசிய பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, அனைத்து அகில பாரதப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். மேலும், தேசப் புனர்நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள பல தேசிய அமைப்புகளின் அகில பாரதப் பொறுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 3 நாள் நடைபெற உள்ள பிரதிநிதி சபைக் கூட்டத்தில் சங்க வளர்ச்சி, செயல்பாடுகள் பற்றிய ஆய்வும், வரும் ஆண்டிற்கான செயல் திட்டங்களும் விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும் தேசத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றிய தீர்மானங்களும் இயற்றப்படும் என ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.