பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல்; வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியதாக தகவல்

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மற்றும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் சோதனை நடத்தினர். கடந்த 2006-11ல் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அதில் ஏதேனும் முறைகேடு செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சோதனையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின்
வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரூ.10 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.