அவசரப்படாதீர்கள், இது நடந்தது தமிழகத்தில் அல்ல! சத்தீஸ்கரில் தான். உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு சத்தீஸ்கரில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.2,000 கோடி ஊழல், அமலாக்க இயக்குனரகத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரான அன்வர் தேபரை அமலாக்கத்துறை சனிக்கிழமையன்று கைது செய்தது. ராய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்வாசல் வழியாக அவர் தப்பிச் செல்ல முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார். பின்னர் ராய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நான்கு நாட்கள் அவரை காவலில் எடுத்துள்ளது. அன்வர் தேபர் காங்கிரஸ் தலைவரும் ராய்ப்பூர் மேயருமான ஐஜாஸ் தேபரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2023ல், அமலாக்கத்துறை, இது சம்பந்தமாக பல்வேறு தளங்களில் சோதனைகளை மேற்கொண்டது. மோசடியில் தொடர்புடைய பல நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றது. 2019 முதல் 2022 வரை நடந்த 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் மற்றும் பணமோசடிக்கான ஆதாரங்களை திரட்டியது. மாநிலத்தில் விற்கப்பட்ட ஒவ்வொரு பாட்டில் மதுபானத்திலும் பணம் வசூலிக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அன்வர் தேபர், ஒரு தனி நபராக இருந்தாலும், உயர்மட்ட அரசியல் நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் சட்ட விரோதமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார். சத்தீஸ்கரில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டில் இருந்தும் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கப்படும் வகையில், அவர் ஒரு விரிவான சதித்திட்டத்தை கட்டமைத்தார். இந்த மாபெரும் ஊழலைச் செயல்படுத்த பல்வேறு நபர்கள், நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கினார். அன்வர் தேபர் இந்த சட்டவிரோத நிதியை சேகரிக்கும் பொறுப்பில் இருந்தார். ஆனால் இந்த மோசடியின் பயனாளி அவர் மட்டுமல்ல. இதில் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை அவர் தனது அரசியல் எஜமானர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார். மது விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும், மாநிலத்திற்கு வருவாய் ஈட்டவும் கலால் துறைகள் செயல்படுகின்றன. ஆனால் அன்வர் தேபர் தலைமையிலான இந்த கிரிமினல் சிண்டிகேட் இந்த நோக்கங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளார். அரசியல் நிர்வாகிகளின் ஆதரவுடன், தனக்கு இணக்கமான கமிஷனர் மற்றும் நிர்வாகத் தலைவர்கள், பணியாளர்களை பணியமர்த்த வைத்தார். தனியார் மது உற்பத்தியாளர்கள், உரிமம் வைத்திருப்பவர்கள், கலால் துறை அதிகாரிகள், மனிதவள சப்ளையர்கள், கண்ணாடி பாட்டில் தயாரிப்பாளர்கள், ஹாலோகிராம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் போன்றவர்கள் தொடங்கி மது வணிகத்தின் முழு சங்கிலியையும் அவர் கட்டுப்படுத்தினார். லஞ்சம் மற்றும் கமிஷனை மிரட்டிப் பறிக்க தனது அதிகாரத்தை பயன்படுத்தினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.