திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு செல்லும் பக்தர்கள், தங்கும் அறைகள் எடுக்க பல சிரமங்களை சந்தித்து வந்தனர். பக்தர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க, புதிய நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, திருமலையில் ஜிஎன்சி டோல்கேட், பாலாஜி பஸ் நிலையம், கவுஸ்தபம் தங்கும் விடுதி, ராம்பக்கீச்சா தங்கும் விடுதிகள், எம்பிசி ஆகிய 6 இடங்களில் அறைகள் பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாளில் அவர்களது அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் சென்று, அந்த தகவலை காண்பித்து, அறைக்கான சாவியை பெற்றுக் கொள்ளலாம். நேரில் வரும் பக்தர்கள், இந்த 6 மையங்களில் ஏதேனும் ஒன்றில் ஆதார் அட்டையை காண்பித்து அறையை பதிவு செய்து கொள்ளலாம். அரை மணி நேரத்துக்குள் அவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு, அதற்கான தகவல் அவர்களின் செல்போனுக்கு சென்றுவிடும். பின்னர் பணம் செலுத்தி விட்டு, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சாவியை பெற்றுக்கொள்ளலாம். இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.