முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கொலையாளிகள் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ‘இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பை நேரடியாக எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த பின்னரும், மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உரிய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நடைமுறை தவறு. இந்த சிக்கலால் மத்திய அரசால் ஒரு தரப்பாக வழக்கில் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக உரிய வாதத்தையும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முடியவில்லை, வழக்குத் தொடர்பான முக்கியமான ஆதார, ஆவணங்களை வாதமாக எடுத்து வைக்கமுடியவில்லை. இதனால் இந்த 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.