தஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மோகன் தலைமையிலான காவலர்கள், ஊரடங்கை முன்னிட்டு காவல் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவினர் தி.மு.க. நகர துணை செயலர் நீலகண்டனை அலைபேசியில் அழைக்க, அங்கு சென்ற நீலகண்டன் அபராதத்தை ரத்து செய்ய வாக்குவாதம் செய்தார். ‘இதற்கு எல்லாம் சிபாரிசுக்கு வரலாமா, என் தெருவில் இரண்டு வாரமாக தண்ணீர் வரவில்லை. அதை தீர்த்து வையுங்க’ எனக் கூறியுள்ளார் எஸ்.ஐ. மோகன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தி.மு.க நிர்வாகியோடு வாக்குவாதம் செய்ததால் இரவோடு இரவாக எஸ்.ஐ. மோகனை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டனர் அவரது மேலதிகாரிகள்.