தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடலில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து ஏற்கெனவே ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 8 மீனவர்கள், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மெரீனா கடல் பகுதியில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க திட்டமிட்டு இருப்பது, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து மத்திய, மாநில அரசுகள் உள்ளடங்கிய எதிர் மனுதாரர்களுக்கு கடல் அளவு உயர்வதையும், அரிப்பையும் தடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும். பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் கடலோர பிராந்தியங்களில் எவ்வித கட்டுமானப் பணியும் மேற்கொள்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும். அனைத்து மாநிலங்களின் கடலோரங்களில் யாருடைய உடல்களையும் எவ்வித முறையிலும் அடக்கம் செய்வதையும் தடுக்க வேண்டும். மெரீனா கடற்கரையின் உள்பகுதியில் 134 அடி உயர பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவையும் ரத்து செய்ய வேண்டும். இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றமால் தமிழக அரசு இந்த பேனா சிலை அமைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.