நீதிபதிகளுக்கு எதிராகப் பேசியதற்காக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) கேரளத் தலைவரான யாஹ்யா தங்கல் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அருண் ராய் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த மே 28 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) கேரளத் தலைவரான யாஹ்யா தங்கல், நீதிபதிகள் காவி நிற உள்ளாடைகளை அணிந்ததால், பி.எப்.ஐ பேரணியில் ஒரு சிறுவன் எழுப்பிய கோஷங்கள் காரணமாக சூடாக உணர்கிறார்கள் என்று வெறுக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். யாஹ்யா தங்கல், தனது பேச்சில் மாண்புமிகு நீதிபதிகளுக்கு எதிராக, அரசியல் அல்லது கருத்தியல் சார்புடைய மிகவும் தீவிரமான, முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை, இழிவான மொழியைப் பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற செயல்கள் கேள்விக்குட்படுத்தப்படாமலும் தண்டிக்கப்படாமலும் இருந்தால், அது நாட்டில் உள்ள நீதித்துறை அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குலைத்துவிடும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த பிப்ரவரியில் மீடியாஒன் செய்தி சேனலின் ஒளிபரப்பு மீதான தடை வழக்கிலும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக யஹ்யா தங்கல் இதே போன்ற கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.