குளத்தை மீட்கக் கோரிக்கை

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்று மூக்குத்திக்குட்டை. அரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம்  அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க பயன்பட்டது. அக்குளத்தை சுற்றியுள்ள நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டது ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், அத்திட்டத்துக்கு இக்குளம் இடையூறாக இருந்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சிலர், குளத்தை சவுடு மண்ணால் மூடிவிட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஊராட்சி நிர்வாகம், மூடப்பட்ட குளத்தைச் சுற்றி சிமென்ட் கம்பங்கள் நட்டு அக்குளத்தை ‘அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றிவிட்டது. இந்த குளத்தை மீட்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பூந்தமல்லி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.