பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து | அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா

 கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய  அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் கடந்த 2021-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு பசுவதை தடுப்பு சட்டத்தில் முக்கியமான திருத்தங்களை கொண்டுவந்தது. அதாவது, 13 வயதுக்கும் அதிகமான பசு மற்றும் எருமைகளையே இறைச்சிக்காக வெட்ட வேண்டும். அதனை மீறினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என திருத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளும், தலித், முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள நிலையில், பசுவதை தடுப்பு சட்டம் மட்டுமல்லாமல் மதமாற்ற தடை சட்டம், ஹிஜாப் தடை உள்ளிட்டவற்றையும் ரத்து செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது

இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘பசுவதை தடுப்பு சட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தையே திருத்தினோம். பாஜக ஆட்சியில் கொண்டுவந்த திருத்தங்களை மாற்ற முடிவெடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பசுவை தெய்வமாக வணங்கும் பழக்கம் நாட்டில் உள்ளது. இந்துக்களுக்கு பசுவுடன் உணர்வு ரீதியான பிணைப்பு உள்ளது. அதனைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் காங்கிரஸுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்றார்.

இதுகுறித்து கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இறைச்சிக்காக எருமைகளை வெட்டும்போது ஏன் பசுக்களை வெட்டக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் ‘‘இந்த சட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம்” என்றார்.

கர்நாடக அரசையும் முதல்வர் சித்தராமையாவையும் கண்டித்து இளைஞர் பாஜகவினர் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பசுவதை தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என முழக்கம் எழுப்பினர்.