தமிழக சிறைச்சாலைகளில் அல்உம்மா பயங்கரவாதிகளுக்கு மதரீதியாக சலுகைகள் வழங்கப்படுகிறதா? என கேட்டு இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் செல்போனில் வெளியில் உள்ள நபர்களிடம் பேசியதாக வெளியாகி உள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அல்உம்மா சிறைக் கைதிகளுடன் சட்டவிரோதமாக செல்போனில் பேசியவர்களை காவல்துறை எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பியுள்ளது விநோதமாக உள்ளது. தமிழக சிறைச்சாலைகளில் அல்உம்மா பயங்கரவாதிகளுக்கு என தனியாக குவாரண்டி உருவாக்கப்பட்டு அங்கு தீவிரவாதிகளின் ராஜ்ஜியம் நடைபெற்று வருவதாக தெரிகிறது. கோவை , பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மத்திய சிறைச்சாலைகளில் அல்உம்மா பயங்கரவாதிகளுக்கு என தனிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருவதை இத்தகைய செய்திகள் உறுதிப்படுத்துகிறது. கைதிகள் என்றால் அனைவரும் ஒன்றுதான் அதிலும் தண்டனை கைதிகள் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும், நடத்தப்பட வேண்டும், ஆனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் உள்ள அல்உம்மா பயங்கரவாதிகளுக்கு உணவு , படுக்கை வசதி , வெளியில் உள்ள நபர்களுடன் பேசுவதற்கான செல்போன் வசதி என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருவது வேதனைக்குரியது.
சிறைக்கு வெளியே நடைபெறும் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு கூட சிறையில் உள்ள தண்டனை கைதிகள் மூளையாக பின்னணியில் செயல்பட்டு வருவதும் பல குற்ற செயல்களில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அல்உம்மா பயங்கரவாதிகள் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு சிறைக்குள் செல்போன் எங்கிருந்து வந்தது யார் கொண்டு வந்தார்கள் என்பதை பாரபட்சமின்றி விசாரித்து அந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சிறைத்துறை நிர்வாகம் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பல சிறைகளில் வேலை செய்யும் சிறைகாவலர்கள், அதிகாரிகள் பயங்கரவாதிகளால் மிரட்டப்படுகின்றனர். இதனால் அவர்கள் அச்சத்தில் கண்டும் காணாமல் போகிறார்கள் என கூறப்படுகிது. தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வாங்கு வங்கி அரசியலுக்காக தமிழக சிறைகளில் மதரீதியாக சலுகைகள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க இந்துமுன்னணி வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.