மத்திய நிதியமைச்சர், தனது 2022-23 பட்ஜெட் உரையின் போது, கடன் வசதி, திறன் மற்றும் ஆட்சேர்ப்பு தொடர்பான சேவைகளை செயல்படுத்த, தேசிய தொழில் சேவை (என்.சி.எஸ்), இ ஷ்ரம், உதயம் மற்றும் அசீம் ஆகிய நான்கு இணையதளங்களை இணைக்கும் அறிவிப்பை செய்தார். இதற்கேற்ப, என்.சி.எஸ் மற்றும் இ ஷரம் இடையேயான இணைப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் மூலம் இ ஷ்ரமில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், தற்போது என்.சி.எஸ்ஸில் தடையின்றி பதிவுசெய்து, சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேட முடிகிறது. இதுவரை, 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ ஷ்ரம் பயனாளிகள் என்.சி.எஸ்ஸில் பதிவு செய்து பயனடையத் தொடங்கியுள்ளனர். வேலை தேடுபவர்களின் திறன் மற்றும் தேவைக்கேற்ப மேசை மற்றும் களப்பணிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகள் கடந்த சில நாட்களில் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் என்.சி.எஸ் தளம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மொத்த விற்பனை, சில்லறை வணிகம், சிவில் மற்றும் கட்டுமானப் பணிகள், அரசு வேலைகள் போன்ற பல்வேறு துறைகளில் பரவி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்களைக் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வீட்டிலிருந்து வேலை, அரசு வேலைகள் போன்றவற்றுக்கான சிறப்பு சாளரம் உள்ளது. தளத்தில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு மென் திறன்கள் மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சி தொகுதிகளை என்.சி.எஸ் இலவசமாக வழங்குகிறது. தளத்தில் பதிவு செய்பவர்கள் தரக் கட்டுப்பாடு அலுவலர், நிர்வாகப் பதவிகள், மேலாளர், கணக்காளர், வேளாண் அதிகாரி போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். அதுவும், தங்கள் பகுதிக்கு அருகில் கௌரவமான தொழில் வாய்ப்புகளை பயனாளிகள் பெற்றுள்ளனர்.