தடை விதிக்க மறுப்பு

தமிழகத்தில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட அதீத மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க கோரி தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர்தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறி மின்கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஏற்கெனவே சட்டத் துறை அதிகாரிகளை நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளதே அதை அமல்படுத்தவில்லையா?’ என கேள்வியெழுப்பினர். அப்போது தமிழக அரசு தரப்பில், ‘நியமன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 மாதத்துக்குள் நியமிக்கப்படுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நூற்பாலைகள் தரப்பில், “சட்டத் துறை அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத் துறை அதிகாரியை 3 மாதத்துக்குள் தமிழக அரசு நியமிக்க வேண்டும். அப்படி மூன்று மாதத்தில் அதிகாரியை அரசு நியமிக்கவில்லை என்றால், மனுதாரர் மீண்டும் முறையிடலாம்” என்று தெரிவித்தனர். அதேசமயம், மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.