பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கான காலக்கெடு 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “மக்கள் குறை தீர்க்கும் பொறிமுறையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வலியுறுத்தலுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும், “நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், குடிமகன் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட புகார், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தீர்க்கப்படும் வரை மூடப்படாது. கடந்த ஆண்டு, பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க அதிகபட்ச கால வரம்பை 60 நாட்களில் இருந்து 45 நாட்களாக துறை குறைத்தது. பாரதத்தில் பயனுள்ள மக்கள் குறை தீர்க்கும் முறையை அமல்படுத்தவும், மக்கள் மத்தியில் திருப்தியை மேம்படுத்தும் வகையில் உலக தரத்திற்கு இணையான நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வரவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீளாய்வுக் கூட்டங்களில், பிரதமரே பொதுமக்களின் குறைகளின் நிலையை ஆய்வு செய்கிறார். 2014ம் ஆண்டு இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் மனநிறைவு மற்றும் நேரக் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய இரட்டைக் காரணிகளால் பொதுமக்கள் குறைகள் தொடர்பான வழக்குகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது குடிமக்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.95 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.மோடி அரசின் முக்கிய மந்திரம், கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனுக்கும் நலத்திட்டங்களின் அனைத்துப் பலன்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான்.குடிமக்களுக்குத் தீர்ப்பளிக்கப்பட்ட குறைகளில் திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு செய்வதற்கான விருப்பம் வழங்கப்படும்.குடிமக்களிடமிருந்து கால் சென்டர் மூலம் பெறப்படும் கருத்துகள், பொறுப்பான அமைச்சகங்கள் அல்லது துறைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.