ஸ்ரீராமர் பிரந்த அயோத்தியில் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கடளை சார்பில் கடந்த ஒரு மாதமாக பாரதம் முழுவதும் நிதி சேகரிப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் ஒன்பது லட்சம் கார்யகர்த்தர்கள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழுக்களாக பிரிந்து பொதுமக்களிடம் நேரடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனை தவிர பகுதி நேரமாக ஈடுபட்டவர்கள், ஆங்காங்கு தன்னார்வலர்களாக கலந்து கொண்டவர்கள், உதவியவர்கள் பலர். 49 கட்டுப்பாட்டு அறைகள் இதற்காக நிறுவப்பட்டன. கடந்த மார்ச் 4 அன்றுவரை பக்தர்களிடம் இருந்து கோயில் கட்ட பங்களிப்பாக வந்த தொகை சுமார் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகம். ஸ்ரீராமருக்கு, மக்கள் ஜாதி மத கட்சி பேதமின்றி நிதி சமர்ப்பணம் செய்ததை நாம் நேரடியாக காண முடிந்தது. நான்கு லட்சம் ஊர்களில் உள்ள 10 கோடி குடும்பங்கள் இதற்காக தொடர்பு கொள்ளப்பட்டன. இது பாரத மக்கள் ஸ்ரீராமர் மேல் வைத்துள்ள பக்தியை, நம்பிக்கையை பறை சாற்றுவதுடன் பாரதம் ஒரு ஆன்மிக பூமி என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒரு நல்ல ஆன்மிக காரணத்துக்காக மிகக் குறைந்த நாட்களில் இவ்வளவு பெரிய தொகை வசூலானது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 86 கோடிக்கும் அதிகமாக நன்கொடை பெறப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.