மத்திய அரசால் சமீபத்தில் முன்மொழியப்பட்ட இணையவழி வர்த்தகமான இ-காமர்ஸ் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ஐ வரவேற்றுள்ளது சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு. மேலும், இது குறித்து மத்திய அரசுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. அதன்படி, ‘முன்மொழியப்பட்ட புதிய விதிகள் இ-காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாப்பதில் ஒரு முக்கியமான மைல்கல். ஆனால், இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களை வெறும் தொழில்நுட்ப தளங்களாக மட்டுமே கூறிக்கொள்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அமேசான், வால் மார்ட், பிளிப் கார்ட் உள்ளிட்ட பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்துள்ள சிறு வணிகர்கள், உபெர், ஓலா போன்றவற்றில் இணைந்துள்ள ஓட்டுநர்கள் மற்றும் சொமாடோ போன்றவற்றில் இணைந்துள்ள சிறிய உணவகங்கள், அர்பன் கிளாப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் சிகையலங்கார நிபுணர், தச்சர்கள், எலக்ட்ரீசியன் போன்றர்களை பாதுகாக்கும் வகையில் இ-காமர்ஸ் சட்டம் செம்மைப்படுத்தப்பட வேண்டும். இ-காமர்ஸ் ஏஜெண்டுகளும், எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், சுரண்டலுக்கு ஆளாகின்றனர். அதற்கு எதிராகவும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும். மின் வணிக பரிவர்த்தனைகள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான பொருட்கள் விற்பனை, தேடல் வழிமுறை மற்றும் பிற தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் பொருத்தமான விதிகளை இதில் சேர்க்கலாம்’ என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் அதில் இடம்பெற்றுள்ளன.