மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் முக்கியக் கொண்டாட்டமான துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது. இதற்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி “நம் பெருமைமிகு கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், தேசிய ஒற்றுமையையும், துர்கா பூஜை வெளிப்படுத்துகிறது. கொல்கத்தா துர்கா பூஜையை, நாம் அனைவரும் ஒரு முறையாவது கண்டுகளிக்க வேண்டும். இது 130 கோடிக்கும் அதிகமான பாரதியர்களுக்கு கிடைத்த பெருமை, மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, “இது வங்கத்துக்கு பெருமித தருணம். உலகம் முழுவதும் உள்ள வங்காளிகளுக்கும் பெருமையானதொரு தருணம்” எனக் கூறியுள்ளார். மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “துர்கா பூஜா எங்களின் பெருமித அடையாளம். வரலாற்று சிறப்பம்சம். இது மேற்குவங்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்” எனத் தெரிவித்துள்ளது.