பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு மற்றும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சி ஆகியவை, தேசவிரோத சதி, நிதி முறைகேடுகள், பயங்கரவாத பயிற்சி, பயங்கரவாத அமைப்புகளுக்காக நிதி சேகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும், அமலாக்கத் துறையும் இணைந்து கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பி.எப்.ஐ அமைப்பினர் இடங்களில் சோதனை நடத்தினர். 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 109 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் பி.எப்.ஐ ரகசியமாக இயங்கி வருகிறது என்ற தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.