ஆர்.பி.ஐ நாணயக் கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் கடந்த 6ம் தேதியன்று தொடங்கியது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. நடப்பு காலண்டர் ஆண்டில் நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் இதுவாகும். ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 6.50 ஆக உள்ளது. இதன் காரணமாக வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை சற்றே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவே இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் பணவீக்கம் குறித்தான கவலைகளுக்கு மத்தியில், இந்த வட்டி அதிகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த மே 2022ல் இருந்து 6 முறை வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த 6ல் 4 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் இக்கூட்டத்தில் எஸ்.டி.எப் விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகவும் எம்.எஸ்.எப் விகிதம் 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜி.டி.பி வளர்ச்சி: உலக நாடுகள் பலவும் பொருளாதார மந்தநிலை, கட்டுப்படுத்தமுடியாத பண வீக்கம், உணவு, எரிபொருள் தட்டுப்பாடு என பல சவாலான சூழலில் சிக்கித்தவித்து வரும் காலகட்டத்தில், பாரதம் தொடர்ந்து வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்நிலையில், பாரதத்தின் ஜி.டி.பி வளர்ச்சி குறித்தான கணிப்பை ரிசர்வ் வங்கி 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் முதல் காலாண்டில் அது 7.8 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 6.2 சதவீதம், மூன்றாவது காலாண்டில் 6 சதவீதம், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்: நடப்பு நிதியாண்டில் பணவிக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் அடுத்த நிதியாண்டின் சராசரி மழைக்காலத்தில் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும். உலக பொருளாதார சூழல் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்ததை போல இப்போது இல்லை. முக்கிய பொருளாதாரங்களில் வளர்ச்சி வாய்ப்புகள் முன்னேறியுள்ளன. பணவீக்கம் குறைந்திருந்தாலும், முக்கிய பொருளாதாரங்களில் இன்னும் இலக்குக்கு மேல் பணவீக்கம் இருக்கிறது. அடுத்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினருக்கு யு.பி.ஐ: ரிசர்வ் வங்கியின் இந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்வைத் தொடர்ந்து, வெளியிடப்பட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளில், பாரதம் வரும் வெளிநாட்டுப் பயணிகள், இங்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு பதிலக,பாரதம் முழுவதிலும் உள்ள யு.பி.ஐ டிஜிட்டல் பேமெண்ட் சேவை கட்டமைப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்த வலியுறுத்தியும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் துவக்கமாக ஜி20 மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு நாட்டின் முக்கியமான விமான நிலையங்களில் யூ.பி.ஐ சேவையைப் பயன்படுத்துவதற்காக வசதிகள் செய்துத் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரிசர்வ் வங்கி, பாரதத்தில் வங்கிக் கணக்குகளை வைத்துள்ள வெளிநாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ’கள், தங்கள் சர்வதேச மொபைல் எண்ணுடன் இனி மிகவும் எளிதான முறையில் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.   மொபைல் நம்பர் இந்தியாவில் வங்கிக் கணக்கை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டில் பயன்படுத்தும் அலைபேசி எண்ணைக் கொண்டே பாரதத்தில் நிதி பரிமாற்றத்தைச் செய்ய முடியும். இந்த புதிய முயற்சியின் கீழ் முதல் கட்டமாகச் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளின் குறியீடுகளைக் கொண்ட அலைபேசி எண்களிலிருந்து யூ.பி.ஐ தளத்தில் இணைந்து பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என அறிவிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

காயின் வென்டிங் மெஷின்: அடுத்த அறிவிப்பாக, மக்கள் மத்தியில் உள்ள சில்லறை காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், முதல் கட்டமாக, நாட்டின் 12 நகரங்களில் நாணயங்களை அளிக்கும் காயின் வென்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த முதற்கட்ட முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், அது பாரதம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். ஏ.டிஎ.ம் இயந்திரங்களை போலவே இந்த காயின் வென்டிங் மெஷின்கள் இயங்கும். ஏ.டி.எம் கார்டு, கியு.ஆர் கோடுகளை பயன்படுத்தி சில்லறை காசுகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.