ராமநவமி கலவர வழக்கு; மே.வங்க அரசு மனு தள்ளுபடி

மேற்கு வங்கத்தில் ராமநவமி அன்று இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் குறித்து, என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட்ட கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹவுராவின் ஷிப்பூர் என்ற இடத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது, இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக உருமாறியது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன; வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ரா மற்றும் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் தல்கோலா ஆகிய இடங்களிலும் பயங்கர கலவரங்கள் வெடித்தன. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. இது, மேற்கு வங்க அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.