ராமாயண மாதம்

கேரளாவில் உள்ள ஹிந்துக்களின் மலையாள நாட்காட்டியின் கடைசி மாதமான ‘கர்கிடகம்’ (ஆடி மாதம்) ராமாயண மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமரின் தெய்வீக கதையை பாராயணம் செய்யும் இந்த ராமாயண மாத அனுசரிப்பு கேரளாவில் இம்மாதம் ஜூலை 17ல் தொடங்கியது. கவிஞர் துஞ்சத் ராமானுஜன் எழுத்தச்சனின் மலையாள மொழிபெயர்ப்பான வால்மீகி ராமாயணத்தின் அத்யாத்மா ராமாயணத்தை அங்கு மக்கள் இல்லம்தோறும் பாடுகிறார்கள். அங்கு கர்கிடகம் மாதம் ராமாயண பாராயணம் மற்றும் ராமர் வழிபாடு என இறைவழிபாட்டுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு. கடவுள் வழிபாட்டைத் தவிர மற்ற செயல்களுக்கு இந்த மாதம் சாதகமற்றதாக கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த புனிதமான ராமாயண மாதம் கடைபிடிக்கப்படுகிறது.

சில காலமாக மக்கள் மறந்துவிட்ட இந்த கர்கிடகம் மாதத்தில் ராமாயணத்தைப் படிக்கும் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்த ஆர்.எஸ்.எஸ் சங்கப் பிரச்சாரகருக்கு அம்மாநிலத்தில் உள்ள ஹிந்துக்கள் நன்றி கூற கடமைபட்டுள்ளனர். ஆம், பரமேஸ்வர் ஜி என்று அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர், மறைந்த பி. பரமேஸ்வரன், கேரளாவில் உள்ள சாதாரண ஹிந்துக் குடும்பங்களிடையே ராமாயணத்தை பிரபலப்படுத்தினார். 1970களின் பிற்பகுதியில் கொச்சியில் நடைபெற்ற விசால ஹிந்து சம்மேளனத்தில் பரமேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட கருத்து ‘ராமாயண மாசச்சரணம்’ அதாவது, ஹிந்துக் கோயில்கள் மற்றும் வீடுகளில் ராமாயண மாதமான கர்க்கிடகத்தை அனுசரிப்பது.

கடந்த இரு வருடங்களாக கொரோனா வைரஸ் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டதால் கோயில்களில் ‘ராமாயண மாசச்சரணம்’ கடைபிடிக்கப்படவில்லை. ஆனால், இவை ஹிந்துக்களின் வீடுகளில் உயிர்ப்புடன் இருந்தன. பல்வேறு ஹிந்து அமைப்புகள், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள் வாயிலாக இதனை மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஒரு மாத ராமாயண பாராயணம், சொற்பொழிவுகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தால் மக்களை சென்றடைந்தன. தற்போது இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதால், இவை கோயில்களில் நடைபெறத் துவங்கியுள்ளன. இதுபோன்ற நல்ல முயற்சிகளை நாமும் பின்பற்றலாமே!