தமிழகத்தில் நேற்று முதல் 27 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் தமிழக அரசு திறந்துள்ளது. கொரோனோ காலத்தில் இது தேவையற்ற செயல், இது கொரோனா பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என இதனை அனைத்து தரப்பினரும் விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியுள்ளது. தமிழகக்த்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது’ என கூறியுள்ளதுடன் ‘மது ஆலைகளின் அன்பான அழுத்தத்திற்கு பணிந்து விட்டாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?’ என சந்தேகத்தை எழுப்பியுள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்.