பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு இரண்டு முறைகள் குறைத்துள்ளது. மாநில அரசுகளையும் வரி குறைப்பு செய்யும்படி பலமுறை கேட்டுக்கொண்டது. எனினும் தமிழக அரசு உட்பட சில எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் வரிகுறைப்பு செய்ய மறுத்துவிட்டன. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, எரிவாயு உருளை மானியம் போன்றவற்றை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசின் நிதியமைச்சர், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியில், தமிழகத்திற்கு உரிய பங்கை மத்திய அரசு தரவில்லை என்ற தி.மு.க அரசின் தவறான குற்றச்சாட்டை கண்டித்தும் இன்று பா.ஜ.க சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து இப்பேரணி துவங்கவுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியை தொடர்ந்து மத்திய அரசின் எட்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மாநிலத்தில் 10 இடங்களில் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. மதுரை பழங்காநத்தத்தில், வரும் 4ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து மத்திய அமைச்சர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.