ராஜ்யசபா எம்.பி பதவி; 11 பேர் போட்டியின்றி தேர்வு

ராஜ்யசபாவில் காலியாக இருந்த 11 இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் 6 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 5 பேரும் என மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். குஜராத்திலிருந்து தேர்வான மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு தேர்வு பெற்ற 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிறைவடைகிறது. இப்பதவிக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குஜராத் மாநில ராஜ்யசபா எம்பியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மொத்தம் 11 இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் தேதி கடந்த 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 6 திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஐந்து பாஜ., வேட்பாளர்களும் என 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத் கோகலே, சமுருல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் பாரிக், ஓ பிரையன் ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், பாஜ., சேர்ந்த ஜெய்சங்கர், சதானந்த் ஷெட் மற்றும் அனந்த் மகாராஜ், பாபுபாய் தேசாய் மற்றும் கேசரிதேவ் சிங் ஜாலா ஆகிய 5 பேர் தேர்வாகி உள்ளனர்.