வீரம் செறிந்த மராட்டிய மண்ணின் வீரர்கள், முகலாய மன்னர்களிடம் தளபதிகளாகப் பணியாற்றிய காலகட்டம். ஜீஜாபாயின் தந்தை ஜாதவ் ராவ் மொகலாயர்களின் பக்கம். கணவர் ஷாஹாஜி, நிஜாமின் பக்கம். இந்த சூழலில், நான்கு மாத கர்ப்பிணியான ஜீஜாபாய் தன் புகுந்த வீட்டுப்பக்கமே நின்றார். ஆனாலும், மராட்டியர்கள் சுய மரியாதையோடு, தமக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி சுயமாக ஆளவேண்டும் என்பதே அவரது லட்சியம்.
அதற்காக தனக்கொரு வீர மகன் பிறக்க வேண்டும் என பிரார்த்தித்தார். 1630 பிப்ரவரி 19ல் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு அவர் சூட்டிய பெயர் சிவாஜி. தன் மகனை மாவீரனாக்குவதற்கு உறுதி பூண்டார். சிவாஜிக்கு முதல் ஆசிரியரே அன்னைதான். சிறு வயதிலேயே ராமாயணம், மகாபாரதம், பாகவதத்திலிருந்து கதைகளைச் சொல்லி வீரத்தையும் அறநெறிகளையும் போதித்தார் ஜீஜாபாய்.
தக்க வயதில் சிவாஜிக்குப் போர்ப் பயிற்சி அளித்து வீரனாக்கினார். பதினாறு வயதில் சிவாஜி படையெடுத்துச் சென்று தோரங் கட் கோட்டையைக் கைப்பற்றியது அவரது இளமை வீரத்துக்கு எடுத்துக் காட்டு. இரவு முழுவதும், தான் இருந்த சிவநேரிக் கோட்டையிலிருந்து, சிங்கக் கோட்டையையே கண் அயராமல் கவனித்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் காலையில் கோட்டையின் மேல் சிவாஜி பறக்க விட்ட காவிக் கொடியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
ஒளரங்கசீப்பை, ஆக்ரா கோட்டையில் சந்திக்க சிவாஜி புறப்பட்டுச் சென்ற போது, நாட்டை தாயின் கைகளில் ஒப்படைத்துச் சென்றார். அங்கு சிவாஜியும், பேரன் சாம்பாஜியும் சிறை பிடிக்கப்பட்ட நெருக்கடி நிலையிலும் நாட்டைத் திறம்பட நிர்வகித்தார் ஜீஜாபாய்.
1664ல், சிவாஜியின் தந்தை இறந்தபோது, தாய் ஜீஜாபாய் அக்கால மரபுபடி உடன் கட்டை ஏற விரும்பினார். ஆனால், சிவாஜி, இந்த நாட்டுக்கு உங்கள் வழிகாட்டுதல் அவசியம் என எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்தினார். 1674ல் தன் தாயின் ஆசியோடு அரியணையேறினார் சிவாஜி. ஆனால், விதி வலியது. மகனுக்கு முடி சூட்டப்பட்ட பன்னிரண்டாவது நாள் ராஜா மாதாவாக இருந்த ஜீஜாபாய் மறைந்தார்.
ஜீஜாபாய் நினைவு தினம் இன்று
ஜெ.எஸ். ஸ்ரீதரன்