சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்தார், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு, தமிழகத்தில் இருந்து, 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 60 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மீதான வன்முறைகளில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அரசு அதிகாரியை ஜாதி பெயரை கூறி திட்டியதாக ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து, தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, விரைவில் அறிக்கை அளிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என, விசாரணையின் போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக இயக்குனர் கூறினார். இதுகுறித்தும் விசாரிக்கப்படும். ராஜகண்ணப்பன் அந்த வகுப்பை சாராதவர் என தெரியவந்தால், தாட்கோ இயக்குனர் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. எனினும் விசாரணை வேகப்படுத்தப்பட்டு உள்ளது. பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக அந்த வகுப்பில் இருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறிய பிறகு அவர்களின் பழைய ஜாதி சான்றிதழ் செல்லாது. அவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அது போலியானதே. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சான்றிதழை சரிபார்த்து வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.